ஈரோட்டில் ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு- உண்டியலையும் மர்ம நபர்கள் தூக்கிச்சென்றதால் பரபரப்பு

ஈரோட்டில் ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. உண்டியலையும் மர்ம நபர்கள் தூக்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-12 22:35 GMT

ஈரோட்டில் ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. உண்டியலையும் மர்ம நபர்கள் தூக்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயின் கோவில்

ஈரோடு இந்திரா நகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் மந்திர் என்ற கோவிலை அந்த பகுதியில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் பூசாரியாக சுப்தேவ் (வயது 45) என்பவர் உள்ளார்.

இவர் தினமும் அதிகாலை கோவிலை திறந்து பூஜைகள் செய்து இரவு 8 மணிக்கு கோவில் நடையை சாத்திவிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பூஜைகள் முடிந்து சுப்தேவ் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

8 பவுன் நகை திருட்டு

நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக சுப்தேவ் வந்தார். அப்போது கோவில் நுழைவுவாயில் கதவை திறந்து கோவில் வளாகத்துக்குள் சென்றார். அங்கு கருவறையில் உள்ள கதவை திறக்க சென்றபோது, ஏற்கனவே கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகி இருந்தது. மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதுபற்றி சுப்தேவ் ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உண்டியலை பெயர்த்து...

அதன் பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கொள்ளை நடந்த ஜெயின் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜெயின் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நள்ளிரவில் கோவில் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைவதும், அவர்கள் நகையை திருடுவதும், உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மோப்பநாய் ஜெர்ரியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

வலைவீச்சு

இதற்கிடையில் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை நேற்று காலை போலீசார் கண்டுபிடித்தனர். இரும்பு உண்டியலை அவர்களால் திறக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்