வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-11-05 18:49 GMT


காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை-பணம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் கதர் விற்பனை நிலைய ஊழியர் வெங்கடாச்சலம் (வயது 55). கடந்த மாதம் 29-ந்தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் 21 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இருதய சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெங்கடாச்சலம் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி ராமதேவி, மகன் சிவராமன் ஆகியோர் மருத்துவமனையில் இருந்த நிலையில்தான் அவர்களது வீட்டில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது.

தந்தை-மகன்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காங்கயம்-கோவை சாலையில் உள்ள காடையூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். அப்போது அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களை துரத்திப்பிடித்த போது அந்த மோட்டார்சைக்கிள் எண்ணும், கண்காணிப்பு கேமராக்களில் திருட்டுச் சம்பவத்தின்போது பதிவாகியிருந்த மோட்டார்சைக்கிள் எண்ணும் ஒரே எண் எனத்தெரிய வந்தது.

இதையடுத்து அவரை காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரது பெயர் மணிகண்டன் (21) என்பதும், அவரது தந்தை செந்தில்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கோவை-பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

வாலிபர் கைது

மேலும் அவர்கள்தான் காங்கயம் அய்யாசாமி நகரில் உள்ள வெங்கடாச்சலத்தின் வீட்டில் கடந்த 29-ந் தேதி நகை, பணத்தை திருடினர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருப்பூர்-அவினாசிபாளையம் அருகே பொல்லிகாளிபாளையத்தில் வீடு எடுத்து தங்கி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த 7½ பவுன் நகைகளை மீட்டனர். மீதி நகைகள் மற்றும் பணம் ஆகியவை செந்தில்குமாரிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்