திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் பிரசித்திபெற்ற ஆதிசிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல பூஜை முடித்து நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு சாக்குபையை தரையில் விரித்து பணம், சில்லரை காசுகளை கொட்டினர். அதில் ரூபாய் நோட்டுக்களை பிரித்து அதை திருடினர். அதேசமயம் உண்டியலில் இருந்த சில்லரை காசுகளை எடுக்காமல் தரையில் விரித்த அதேசாக்குபையிலே போட்டுவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல பூசாரி அங்கு வந்து கோவிலை திறந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டும், தரையில் விரித்த சாக்குபையில் சில்லரை காசுகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 3 பேர் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.