புஞ்சைபுளியம்பட்டியில் துணிகரம் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை; வாசலில் நின்ற காரையும் மர்ம நபர்கள் ஓட்டிச்சென்றனர்

புஞ்சைபுளியம்பட்டியில் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வாசலில் நின்ற காரையும் ஓட்டிச்சென்றனர்.

Update: 2022-05-29 20:40 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் தொழில் அதிபர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வாசலில் நின்ற காரையும் ஓட்டிச்சென்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழில் அதிபர்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி புதுப்பாளையம் கணபதி கார்டனில் வசித்து வருபவர் இளங்கோ (வயது 38). இவருடைய மனைவி நித்யா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இளங்கோ திருப்பூரில் பனியன் கம்பெனிகளுக்கு டிசைனிங் அமைத்து தரும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இளங்கோ அவருடைய நண்பர்கள் கார்த்தி, சரவணன் ஆகியோர் அவரவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். இளங்கோவின் வீட்டில் மீன் தொட்டி உள்ளது. இதிலுள்ள மீனுக்கு உணவு போடுவதற்காக இளங்கோ வீட்டு சாவியை எதிரே குடியிருக்கும் கந்தசாமி (58) என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் தினமும் காலை இளங்கோ வீட்டை திறந்து மீனுக்கு உணவு போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு செல்வார்.

கதவு உடைப்பு

அதேபோல் நேற்று காலை அவர் மீனுக்கு உணவு போடுவதற்காக இளங்கோ வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆனால் நுழைவுவாயில் கதவு பூட்டி கிடந்தது. இதுகுறித்து அவர் உடனே இளங்கோவுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே இளங்கோ கேரளாவில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த காரை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் குபேரன் சிலை மீது தொங்க விடப்பட்டு இருந்த 6 பவுன் தங்க சங்கிலியையும் காணவில்லை. மேலும் பீரோைவ பார்த்தபோது அதிலிருந்த ரூ.10 ஆயிரமும் காணவில்லை.

நகை-பணம் திருட்டு

இதுகுறித்து இளங்கோ புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வீடு பூட்டி கிடப்பதை மர்மநபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வீட்டு சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளனர். பின்னர் வீட்டு கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து திறந்துள்ளனர். அதன்பின்னர் பூஜை அறையில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து பூஜை அறையில் குபேரன் சிலை மீது தொங்க விடப்பட்டு இருந்த 6 பவுன் தங்கசங்கிலியை திருடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த நுழைவுவாயில் கதவின் சாவியையும், கம்ப்யூட்டர் மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த கார் சாவியையும் எடுத்துள்ளனர்.

காரையும் ஓட்டிச்சென்றனர்

அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஓட்டிச்சென்று நுழைவுவாயில் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகையை சேகரித்தனர். மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி பொன்னம்பாளையம் பஸ் நிறுத்தம் வரை ஓடி சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து நகை, பணம், காரை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்