வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
நாமக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உறவினர் வீட்டிற்கு சென்றார்
நாமக்கல் - திருச்சி சாலை பொன்விழா நகரில் ஒரு வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் சுப்ரமணியம் (வயது43). இவர் மாருதிநகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி பிரேமா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்று விட்டார்.
நகை திருட்டு
இந்த நிலையில் நேற்று காலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியம் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.