பென்னாகரம்:
பென்னாகரத்தில் விவசாயி மொபட்டில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்ன பள்ளத்தூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38). விவசாயி. இவர் பென்னாகரத்தில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்க சென்றார். பின்னர் வங்கியில் இருந்து நகையை மீட்ட முனியப்பன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தையும் எடுத்துள்ளார். பின்னர் நகை மற்றும் பணத்தை மொபட்டில் வைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது வழியில் ஒரு மளிகை கடை முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது நகை, பணம் திருட்டு போனது, இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து அவர் பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.