காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தையொட்டி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-08 09:30 GMT

காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய திருவிழாவாக கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி 63 நாயன்மார்கள் திருவிழாவும், இரவு வெள்ளி தேரோட்டமும், மறுநாள் மகாரதம் எனும் தேரோட்டமும் நடைபெற்றது. 4-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சந்திரசேகரும், பாகம்பிரியாள் அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சர்வதீர்த்த குளக்கரையில் அஸ்திரதேவருடன் எழுந்தருளினர். சர்வதீர்த்தக்குளம் தென்கரை பகுதியில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் முன்பாக தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

அஸ்திரதேவருடன் கோவில் சிவாச்சாரியார்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினார்கள். பின்னர் சந்திரசேகருக்கும் பாகம்பிரியாள் அம்பிகைக்கும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தீர்த்தவாரி திருவிழாவில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உள்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத் சாந்தாராம் தலைமையில் சர்வதீர்த்தக்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காஞ்சீபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பலரும் ரப்பர் படகில் அமர்ந்தவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்