அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-04 10:55 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சித்திரை வசந்த உற்சவம்

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது கடந்த 25-ந் தேதி தொடங்கியது.

முன்னதாக 24-ந் தேதியன்று மாலையில் கோவில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடி பெண் பூப் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி

தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் சுமார் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை வலம் வந்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்மத தகனம்

அதனை தொடர்ந்து அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்