தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் 34 வயது பெண். அவர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் என்றுகூறி, தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் தன்னுடைய உறவினர்களிடம் நடந்தவற்றை செல்போனில் கூறினார். இதனையடுத்து அங்கு வந்த உறவினர்கள் அந்த பெண்ணை வைத்து வாலிபரை பேச வருமாறு செல்போனில் அழைத்துள்ளனர். அந்த வாலிபர் வந்ததும், அவரை பிடித்து வைத்து கொண்டு தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மோதிரப்பா சாவடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபுதேவா (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுதேவாவை கைது செய்தனர்.