வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து நகை மீட்பு
ராமநாதபுரம் அருகே வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து நகை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் அச்சுந்தன் வயல் பாலாஜி நகரை சேர்ந்தவர் கூரிச்செல்வம் (வயது 41). இவர் மோட்டார் சைக்கிளில் இடையர் வலசை பெட்ரோல் பங்க் அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கூரிச்செல்வம் அணிந்து இருந்த 2½ பவுன் தங்கச்செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மதுரையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தில் கூரிச்செல்வத்திடம் தங்கசெயினை பறித்து சென்ற தகவலை கூறினர். மேலும் அதனை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி நரசிங்க கூட்டம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (34) என்பவரிடம் கொடுத்து பணமாக வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கைதாகி சிறையில் இருந்த பிரபாகரனை ராமநாதபுரம் பஜார் போலீசார் நேற்று போலீஸ் காவலில் எடுத்து வந்தனர். அவரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று அடகுகடையில் வைத்த நகையை மீட்டு கொண்டு வந்தனர். நகை மீட்கப்பட்டதை தொடந்து பிரபாகரனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பஜார் போலீசார் சிறையில் அடைத்தனர்.