சிவகாசியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சை கடத்தி வந்த வாலிபர் சிக்கனார்

சிவகாசியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சை கடத்தி வந்த வாலிபர் சிக்கனார்.

Update: 2023-01-27 20:30 GMT

சிவகாசியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சை கடத்தி வந்த வாலிபர் சிக்கனார்.

பஸ் கடத்தல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரம்மன். இவரது தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்து வர பஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த பஸ் தினமும் தொழிலாளர்களை கொண்டு வந்து விட்ட பின்பு சிவகாசி பாறைப்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுத்தி இருந்த பஸ்சை காணவில்லை. இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு தகவல் தெரிவித்தனர். பஸ் கடத்தப்பட்டது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸ்நிலையத்தில் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் புகார் ெகாடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் பஸ்சை தேடி வந்தனர். மேலும் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பஸ் திண்டுக்கல் சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்வது தெரியவந்தது. இதற்கிடையே சிவகாசியில் இருந்து பெங்களூருவுக்கு பட்டாசுகளை இறக்கி விட்டு வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பை அடுத்த பூதிப்புரத்தில் சாலையோரம் பட்டாசு தொழிற்சாலை பஸ் நிற்பதை பார்த்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

வாலிபர் சிக்கினார்

உடனே சிவகாசி போலீசார் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிபிரிவு ஏட்டு பழனிெசல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பஸ்சை மீட்டனர். அந்த பஸ்சை கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தைக்கால் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த முகமது கரிமுல்லா (வயது 35) என்பதும், அவர் சிவகாசியில் உள்ள போர்வெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பஸ்சையும், அதனை கடத்தி வந்த நபரையும் சிவகாசி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்