போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்
போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம் குறித்து டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புத்தியை தடுமாற செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாக கருதி நாடுபவர்கள் வாழ்வை தொலைத்து கொள்கிறார்கள்.
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார் வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
ஆலமர விருட்சம்
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தாலும் சமுதாயத்தில் போதைப்பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப்பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப்பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை சவைத்து உமிழ்வதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, 'பான்பராக், குட்கா போன்றவை புற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதுடன், பிறர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவும் இருக்கிறோம்.
தற்போது இருக்கும் சட்டத்தால் இதனை தடை செய்ய முடியவில்லை என்றால், எந்த வழியிலும் திரும்பவும் விற்பனைக்கு வந்து இளைய சமுதாயத்தினரை பாதிக்காத வகையில், சட்டசபையில் விவாதித்து புதிய சட்டத்தை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்து உள்ளார்'.
மனக்கட்டுப்பாடு
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய், உளவியல் மற்றும் புகையிலை தடுப்பு மைய துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன் வீரைய்யா கூறும் போது, நம் நாட்டில் புகையிலையால்தான் 40 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புகையிலையில் பல வகைகள் இருந்தாலும் வாயில் மெல்லும் வகை புகையிலை முன்பு கிடையாது.
கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பரவலாக புழக்கத்தில் வந்து உள்ளது. இங்கு தயாரிப்பு இல்லை என்றாலும் அதிகமான பேர் இதற்கு அடிமையாகி உள்ளனர். புகைப்பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வாயில் மெல்லும் புகையிலையால் அதனை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக வாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைகிறது. அத்துடன் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்கள் சரியான நேரத்தில் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறாமல், முற்றிய நிலையில் சந்திப்பதால் நோயை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பான்பராக், குட்கா போன்ற போதை பாக்குகள் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் வந்தால் மருத்துவ சிகிச்சையும், மருத்துவமனையில் தங்கி இருக்கும் காலமும் அதிகம் தேவைப்படும். போதைப்பாக்குகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இளைய தலைமுறையை தான் இலக்காக கொண்டு விற்பனை செய்கின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசு இதன் விற்பனையை அடியோடு நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் மனக்கட்டுப்பாடுடன் இருந்து ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க அனைவரும் முன்வர வேண்டும்.
விழிப்புணர்வு
நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார்:-
கடந்த காலங்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர் தான் போதை பழக்கத்திற்கு அடிமையான நிலையில் சமீப காலமாக நாட்டின் எதிர்கால தூண்களாக கருதப்படும் இளைஞர்களும், மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், போதை மாத்திரைகள் பழக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் நுரையீரல், கல்லீரல், இதய நோய், நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதுடன் சமுதாய பாதிப்பும் ஏற்படுகிறது.
தாங்கள் செய்வது அறியாமல் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவியல் நிகழ்வுகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அதிலும் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிக்கும் நடைமுறைகளால் அரசுக்கும் தேவையற்ற பொருள் இழப்பும் ஏற்படுகிறது. எனவே அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் போதைப்பழக்கம் தவிர்க்கப்பட உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
வேலைவாய்ப்பு
வத்திராயிருப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக்:- இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்கள் சிறு வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி தங்களது உயிரை பணயம் வைத்து வருகின்றனர்.
மது, புகையிலை, குட்கா போன்ற பல்வேறு போதை பழக்கங்களுக்கு இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது சமூகத்தில் தீயசெயல்களில் ஈடுபட்டு குற்றவாளியாக கூட இந்த போதை பழக்கமானது உருவெடுக்க வைக்கிறது.
இளைஞர்கள் மத்தியில் இந்த போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தாலே போதை உள்ளிட்ட பல்வேறு தீய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தாங்களாகவே தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு முன்னேறுவதற்கு ஒரு வழிவகை உருவாகும்.
10 ஆண்டுகள் சிறை
அருப்புக்கோட்டை மூத்த வக்கீல் குருசாமி:-
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்.
போதை பொருள் 5 கிராம் வரையில் வைத்திருப்பதற்கு 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்படுகிறது. 5 கிராமிற்கு அதிகமாக போதை பொருள் வைத்திருந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் வழங்கப்படுகிறது. இன்னும் இந்த தண்டனையை கடுமையாக்கினால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய பேரை விடுவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.