சினிமா பாணியில் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணியாக இருப்பதாக கணவரையும், உறவினர்களையும் ஏமாற்றிய இளம்பெண்; தக்கலை அருகே பரபரப்பு

தக்கலை அருகே வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணியாக இருப்பதாக கணவரையும், உறவினர்களையும் ஏமாற்றிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-18 21:51 GMT

தக்கலை, 

தக்கலை அருகே வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணியாக இருப்பதாக கணவரையும், உறவினர்களையும் ஏமாற்றிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

2 மாதத்தில் கர்ப்பம்

திரைப்படங்களில் பெண்கள் தான் கர்ப்பிணியாக இருப்பதாக வயிற்றில் துணியை கட்டி உறவினர்களை ஏமாற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதுபோல், தக்கலை அருேக ஒரு இளம்பெண் வயிற்றில் துணியை கட்டி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபருக்கும் இரவிபுதூர்கடை அருகில் உள்ள குருவிக்காடுகாலனியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி 2 மாதத்தில் இளம்பெண், தான் கர்ப்பம் அடைந்ததாக கணவரிடம் கூறி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அருகில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

அரசின் உதவித்தொகை பெற்றார்

அவரது கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு டாக்டர்களின் ஆலோசனைபடி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பக் கால அரசின் உதவித்தொகையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அவரது கர்ப்பம் கலைந்துள்ளது. இதை வெளியில் சொல்ல தயங்கிய இளம்பெண் சினிமா பாணியில் வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணியாக இருப்பதாக கணவரையும், உறவினர்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.

இறுதியில் வேடத்தை கலைப்பதற்காக குழந்தை பிறந்து இறந்ததாக கூறி விடலாம் என நினைத்துள்ளார்.

அதன்படி தாயிடம் தனக்கு பிரசவ வலி வருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய தயார் அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற விவரங்களை பார்த்துவிட்டு பிரசவ வார்டில் அனுமதித்துள்ளனர்.

டாக்டர்கள் அதிர்ச்சி

பின்னர் மறுநாள் இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் வயிற்றில் துணி கட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாயாரிடம் விசாரித்த போது, மகள் பிரசவ வலி வந்ததாக கூறியதால் அழைத்து வந்ததாகவும், வேறு எதுவும் தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து தாயிடம் இருந்து எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த தாயிடமும், மகளிடமும் குழந்தை எங்கே? என கணவரும், உறவினர்களும் விசாரித்தனர். அப்போது குழந்தை வயிற்றிலேயே இறந்ததால் அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாக கூறியுள்ளனர். இறந்த குழந்தை எங்கே என கேட்டபோது ஆஸ்பத்திரியில் இருந்து தரவில்லை என கூறி சமாளித்துள்ளனர்.

போலீசில் புகார்

இதில் சந்தேகம் அடைந்த கணவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்தார். அப்போது நடந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தன்னை ஏமாற்றிய மனைவி இனிமேல் தனக்கு தேவையில்லை என மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்