கள்ளகாதலன் மூலம் பிறந்த குழந்தையை கணவனுக்கு தெரியாமல் ஏரியில் வீசி விட்டு சென்ற இளம்பெண்: போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
சென்னை,
வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.
சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை. இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.
வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது. 2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.
தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.