கழுமரம் ஏறிய இளைஞர்கள்
வடமதுரை அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இளைஞர்கள் கழுமரம் ஏறினர்.
கோவில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மோளப்பாடியூரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 21-ந்தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, முளைப்பாரி மற்றும் அக்னி சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் அமைத்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி 60 அடி உயர 2 கழு மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் அருகே நடப்பட்டன. பின்னர் கோவில் முன்பு 4 சிறுவர்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக உறவினர்கள் அழைத்து வந்து வெள்ளை துணி போர்த்தி படுக்க வைத்தனர். இது படுகளம் என்று அழைக்கப்படுகிறது.
கழுமரம் ஏறிய இளைஞர்கள்
இதில் சிறுவர்கள் உயிரற்ற நிலையில் இருப்பதாக ஐதீகம். இதையடுத்து சிறுவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் பாடியூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கழுமரத்தில் ஏறினர். மரத்தின் உச்சியில் கட்டி இருந்த காணிக்கை, விபூதி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கீழே இறங்கினர்.
அப்போது ஆட்டுக்கிடாய்களை வெட்டி பலியிட்டு சிறுவர்களை படுகளத்தில் இருந்து உறவினர்கள் தூக்கினர். இது சிறுவர்கள் உயிர் பெறுவதாக நம்பப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறுவர்களை தோளில் சுமந்துகொண்டு கோவிலை சுற்றி வந்தனர். இதையடுத்து கழு மரத்தில் இருந்து எடுத்து வந்த விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.