சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் தாலுகா அரையபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் கோகிலவாசன்(வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சமூக பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் ஆரோக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கோகிலாவாசன் அந்த சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்து விட்டார். இதனையடுத்து சிறுமியை மீட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோகிலவாசனை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கோகிலவாசன் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.