வாழை விளைச்சல் அமோகம்

உப்புக்கோட்டை பகுதியில் போதிய தண்ணீர் வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் வாழை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது.

Update: 2023-08-28 20:15 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதிகளான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டு வாழை, ரஸ்தாலி, திசுவாழை, செவ்வாழை போன்ற வாழை வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது போதிய தண்ணீர் வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் வாழை நன்றாக விளைச்சல் அடைந்துள்ளது. அதேநேரத்தில் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.18-க்கு விற்பனையான திசு வாழைக்காய் தற்போது கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் நாலிபூவன் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், செவ்வாழை ரூ.35 முதல் ரூ.50 வரையிலும் வாழைக்காயின் தரத்திற்கு ஏற்ப வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடைமடை பகுதிகளில் போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அதேபோல் வாழைத்தார் விலையும் அதிகரித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்