லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை இறக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் கூலியை உயர்த்தி வழங்க கோரி லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை இறக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-06 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கூலியை உயர்த்தி வழங்க கோரி லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை இறக்க மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி உயர்வு

மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து கொண்டு வரப்படும் மதுபாட்டில்களை டாஸ்மாக் குடோன்களில் இறக்கும் பணியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தினர்(சி.ஐ.டி.யு) லிக்கர் பெட்டிக்கு ரூ.5.50-ல் இருந்து ரூ.8 ஆகவும், பீர் பெட்டிக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8-ஆகவும், பெட்டிக்குள் பெட்டி ஒன்று ரூ.6.50-ல் இருந்து ரூ.9 ஆகவும், வெளிநாட்டு மதுபான பெட்டிக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், குடோன் விட்டு குடோன் மாற்றும்போது பெட்டிக்கு ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம்

மேலும் நேற்று முதல் மேற்கண்ட கூலி உயர்வு வழங்கும் மதுபான கம்பெனிகளின் பெட்டிகளை மட்டும் இறக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் குடோனுக்கு வந்த மதுபாட்டில்களை இறக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரிகள் குடோனுக்கு வெளியே காத்திருந்தன.

முடிவு இல்லை

இதுகுறித்து தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தினர் கூறியதாவது:-

மதுபான உற்பத்தி ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 7 மாதங்களாக மனு கொடுத்தும், கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கூலி உயர்வை கொடுக்கும் மதுபான உற்பத்தி ஆலையின் மதுபாட்டில்களை மட்டும் இறக்க முடிவு செய்து உள்ளோம்.

இதனால் குடோனுக்கு வந்த மதுபாட்டில்களை இறக்கவில்லை. அதே நேரத்தில் மதுக்கடைகளுக்கு ஏற்றும் பணியில் மட்டும் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்