ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-03 18:54 GMT

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்தால் அவர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

விசாரணை

அதிலும் ஒரு சில நபர்களுக்கு மட்டும் தான் நாள் ஒன்றுக்கு ரூ.290 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ.210 மட்டுமே வழங்குகின்றனர். எனவே இதனை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில், சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்