கடலூர் முதுநகரில்வடமாநில தொழிலாளி அடித்துக்கொலைமற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை
கடலூர் முதுநகரில் வட மாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். மற்றொரு வாலிபருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் முதுநகர்,
தொழிலாளி
கடலூர் முதுநகர் குடிகாட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தேவரிக்கான் மகன் சஞ்சய் குமார் (வயது 43). அதே மாநிலத்தைச் சேர்ந்த சேட்டு சிங் மகன் சஞ்சய் சிங் (32) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு 2 பேரும் வேலை முடிந்து சக தொழிலாளர்களுடன் வெளியே வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் திடீரென கட்டையால் 2 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் விழுந்தனர்.
சாவு
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பலத்த காயமடைந்த சஞ்சய் சிங் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
தொடர்ந்து எதற்காக அந்த கும்பல் அவர்களை தாக்கியது, அந்த கும்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கடலூரில் வட மாநில தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.