கொதிக்கும் சாம்பாரை சிறுமி மீது ஊற்றிய தொழிலாளி
தேவதானப்பட்டியில் கொதிக்கும் சாம்பாரை தொழிலாளி ஒருவர் சிறுமி மீது ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தன் மனைவியுடன் தகராறு செய்து கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், பாத்திரத்தில் வைத்திருந்த கொதிக்கும் சாம்பாரை எடுத்து வீட்டுக்கு வெளியே ஊற்றினார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மொக்கபாண்டி மகள் இளமதி (6) மீது பட்டது. அந்த சிறுமி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள். உடனே காயம் அடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.