பரிசல் துறையில் குளிக்க சென்ற தொழிலாளி மாயம்
பண்ணவாடி பரிசல் துறையில் குளிக்க சென்ற தொழிலாளி மாயமானவரை தேடும் பணி நடைபெற்றது.
மேட்டூர்
ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48), வெல்டிங் தொழிலாளி. இவர் சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த பண்ணவாடி கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். நேற்று கோவில் மஞ்சள் நீராட்டு விழாவை முடித்துக்கொண்டு குளிப்பதற்காக பண்ணவாடி பரிசல் துறைக்கு ராஜா தனது நண்பர்கள் உடன் சென்றார். காவிரி ஆற்றில் நீந்தி குளித்துக் கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் கரைக்கு திரும்பி வந்தனர். ஆனால் ராஜா மட்டும் நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு வரவில்லை. இதனால் ராஜாவுடன் வந்தவர்கள் அவரை தேடி பார்த்தும் கிடைக்காததால் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேட்டூர் தீயணைப்பு நிலையத்தினர் பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு வந்து ராஜாவை தேடி பார்த்தனர் ஆனால் ராஜா கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் ராஜாவை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) மீண்டும் அவரை தேடும் பணி நடக்கிறது. ஆற்றில் குளிக்க சென்றவர் மாயமானதால் அந்த கிராம மக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.