கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45). கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்து கணபதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வைரமுத்து தினமும் கிடைக்கும் வருமானத்தை குடித்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் அதே பகுதியில் உள்ள மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் மீது உட்கார்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் எதிர்பாராத வகையில் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.