ராஜபாளையம்,
ராஜபாளையம் சுப்பராஜா மடம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). தொழிலாளி. பாபுராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அய்யனார் கோவில் ஆற்றில் மழை பெய்ததால் தண்ணீரை பார்ப்பதற்காக இருவரும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ராஜபாளையம் நோக்கி வந்தனர். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்தனர் இதில் பாலாஜி, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார். வெங்கடேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.