பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது
புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
பாடப்புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி அடுத்ததாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் வருகிற கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வரப்பெற்றுள்ளன. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குடோனில் இப்பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
60 ஆயிரம் மாணவர்கள்
இந்த நிலையில் விலையில்லா பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனை சரக்கு வேன், மினி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் 138 பள்ளிகளுக்கு 60 ஆயிரத்து972 மாணவ-மாணவிகளுக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெறுவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்படும். மேலும் அரசின் விலையில்லா நோட்டுகள், பேக்குகள், காலணிகள் உள்ளிட்டவை வந்தபின் படிப்படியாக அனுப்பப்படும் என்றனர்.