தற்காலிக சாலைகளை சீரமைக்கும் பணி மும்முரம்

முதுமலையில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்த தற்காலிக சாலைகளை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-04-27 18:45 GMT

கூடலூர்

முதுமலையில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்த தற்காலிக சாலைகளை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பழுதடைந்த பாலங்கள்

மைசூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழமையான பாலங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் புதிய பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கார்குடி உள்ளிட்ட 2 இடங்களில் பழமையான பாலங்களை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரிசல்கள் ஏற்பட்டு சேதம்

இதன் காரணமாக போக்குவரத்து தடையின்றி நடைபெற பாலத்தின் கரையோரம் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தற்காலிக பாலங்கள் மற்றும் சாலைகள் அமைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்காலிக சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால் சரக்கு லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் முதுமலை கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தற்காலிக பாலம் மற்றும் சாலைகள் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர், மசினகுடி போலீசார் விரைந்து வந்து தற்காலிக சாலைகளில் வாகனங்கள் இயக்க தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து பழுதடைந்த பாலங்கள் வழியாக மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சீரமைக்கும் பணி மும்முரம்

இந்த நிலையில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்த தற்காலிக சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சேதம் அடைந்த இடங்களில் மண் மூட்டைகளை அடுக்கி வைத்து மீண்டும் சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், தற்காலிக பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்