சூரசம்ஹாரத்துக்கு பொம்மைகள் தயார் செய்யும் பணி மும்முரம்

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக பொம்மைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-10-28 18:45 GMT

கந்தசஷ்டி விழா

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது. அப்போது சூரர்களான தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் வதம் செய்வார்.

இந்தநிலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சூரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சூரர்களின் உருவ பொம்மைகளை செய்து வருகின்றனர். அதிலும் இவர்கள் உருவாக்கும் பொம்மைகள் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மைகள்

அதன்படி சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின் சூரர்களின் பொம்மைகள் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொம்மைகளை செய்தவர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்