கொரோனா காலத்தில் மருத்துவ மாணவர்களின் பணி பாராட்டுக்குரியது

கொரோனா காலத்தில் மருத்துவ மாணவர்களின் பணி பாராட்டுக்குரியது என்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி நடந்த பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2022-05-29 12:47 GMT

தூத்துக்குடி:

கொரோனா காலத்தில் மருத்துவ மாணவர்களின் பணி பாராட்டுக்குரியது என்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி நடந்த பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி டீன் நேரு தலைமை தாங்கினார். துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 1,552 படுக்கைகளுடன் தேவையானமருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நம்புகிறேன். கொரோனா தடுப்பூசி பிரசாரங்களில் உங்கள் ஈடுபாடு பாராட்டுக்குரியது.

மேலும் இது போன்ற கள அனுபவங்கள் மற்றவர்களைவிட உங்களுக்கு முன்னோடியாக இருக்கும் . நீங்கள் மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து டாக்டராக மாறி உள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றி உள்ளீர்கள்.

பெருமை

நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழகஅரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் தான். டாக்டராவது மிகப் பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். நீங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்துக்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மை. உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை உங்களது பெற்றோர்களுக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளது. நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய டாக்டராகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

விழாவில் மருத்துவ அலுவலர் குமரன், டாக்டர் குமாரசாமி மற்றும் டாக்டர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்