விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-08-17 19:56 GMT

நாகர்கோவில்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி, குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாட இந்து முன்னணி, இந்து மகா சபா உள்பட இந்து அமைப்புகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

சிலைகள் செய்யும் பணி தீவிரம்

இந்து முன்னணி சார்பில் கண்ணாட்டுவிளை பகுதியில் விநாயகர் சிலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை 320 சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருச்செந்தூரில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்து மகா சபா சார்பில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியில் நடந்து வருகிறது.

இதற்காக ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் தஞ்சாவூரில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

7½ அடி உயரம்

ஊர்வலத்துக்காக 7½ அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் இந்த விநாயகர் சிலைகள் இறுதி கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வர்ணம் தீட்டப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும்.

அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜை நடத்தப்படும். அதன்பிறகு சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடல், ஆறு உள்பட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்