விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.
விநாயகர் சதுர்த்தி
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.
குறிப்பாக இந்து முன்னணியினர் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபடுவார்கள். பின்னர், 3-ம் நாள் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சிலை தயாரிப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகளை காகிதக்கூழ் கொண்டு ரசாயன பூச்சு இல்லாமல் சிலைகள் தயாரிக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகிய கலவைகளை பயன்படுத்தியே சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் அரை அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
திருச்சியில் சீராத்தோப்பு, திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை போன்ற பகுதிகளில் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறுகிறது. தாமரை, யானை, மூஷிகம், சிம்மம், மயில் போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்று பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை ஆர்டரின் பேரில் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
விலை உயர்வு
குறிப்பாக ராஜசிம்ம விநாயகர், தர்பார் விநாயகர், கஜமுக விநாயகர், தாமரை விநாயகர், கற்பக விநாயகர், சங்கு விநாயகர், யோக விநாயகர், சிவன், பார்வதி மடியில் அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், சயன விநாயகர் என்று பல்வேறு தோற்றங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இப்போது, இந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும், இதர அழகுபடுத்துதல் பணிகளும் நடைபெறுகின்றன. பிரமாண்ட சிலைகள் மட்டுமல்லாது வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும் போது, பல்வேறு அமைப்புகளின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. உயரத்திற்கேற்ப ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்தாண்டு சிலைகளின் விலை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. என்றனர்.