பில்லர் ராக் பகுதியில் யானைகள் உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவருவதற்கு வனப்பகுதிகளில் யானைகள் உருவச் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-06-07 19:00 GMT

மோயர் பாயிண்ட்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மோயர் பாயிண்ட் என்னுமிடத்தில் காட்டெருமை உருவச் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டெருமை உருவச் சிலை முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

யானைகள் உருவச் சிலை

இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானைகள் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவர் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து வருகிறார். இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், புகழ்பெற்ற பில்லர் ராக் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு யானைகளின் உருவச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மூன்று பெரிய யானைகள், இரண்டு குட்டி யானைகள் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்படும். இதே போல வனப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளன என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்