கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-01-03 18:45 GMT

திருவெண்காடு, ஜன.4-:

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரும்புகள் வெட்டும் பணி

தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.ஆயிரம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் செங்கரும்பு வழங்குகிறது. சீர்காழி அருகே உள்ள அல்லிவளாகம், சென்பதனிருப்பு, சாவடி, கீழையூர், ராதாநல்லூர், நாங்கூர், காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. மேலும் பயிரிடப்பட்டுள்ள இடத்திலேயே கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது.

சீர்வரிசை

இதுகுறித்து கரும்பு விவசாயி ஒருவர் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு சீர் செய்தல், திருமணம் ஆகி முதலாம் ஆண்டு பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு சீர் வரிசை வைப்பது நாம் தொன்று தொட்டு முன்னோர்கள் நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த பொங்கல் சீர் வரிசையில் பச்சரிசி, அச்சு வெல்லம், வாழைப்பழம், செங்கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக தருவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது.

கரும்பு விற்பனை

நவீன காலத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் தங்களுடைய சகோதரிகளை பொங்கல் நேரத்தில் சந்தித்து சீர்வரிசை வைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் புத்தாண்டு பிறந்த உடனே நேரில் சந்தித்து சீர்வரிசை வழங்கி வருகின்றனர். இதற்கு தேவைப்படும் கரும்புகளை பயிரிடப்பட்டுள்ள இடங்களில் நேரில் சென்று வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது கரும்பு வெட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தற்போது கரும்பு ஒன்று ரூ.30-ல் இருந்து ரூ. 35 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள கிராமங்கள் இருப்பதால் கரும்பை விற்பனை செய்வதில் சிரமம் இல்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்