அய்யங்குளத்தை தூர்வாரி அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைத்து அழகுபடுத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-10-07 17:09 GMT

திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைத்து அழகுபடுத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அய்யங்குளம்

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீப திருவிழாவின் போது அய்யங்குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த அய்யங்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம் மற்றும் 360 அடி அகலத்தில் சதுர வடிவில் மிக நேர்த்தியான கட்டமைப்புடன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த குளம் பாசிபடித்து சேறும் சகதியுமாக இருந்ததால் துர்நாற்றம் வீசி வந்தது.

தூர்வாரி அழகு படுத்தும் பணி

பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த இந்த குளத்தை தூர்வாரி அழகு படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்தும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் 'தூய்மை அருணை' அமைப்பு அய்யங்குளத்தை தூர்வாரி அழகுபடுத்த முன் வந்தது.

அதைத்தொடர்ந்து இரவு பகலாக தூர்வாரும் பணி நடைபெற ஆரம்பித்தது

தண்ணீர் முழுவதும் அகற்றி முற்றிலுமாக தூர்வாரி சேறும் சகதியும் அகற்றப்பட்டது. மேலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கற்கள் சீரமைக்கப்பட்டன. குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அண்ணாமலையார் மலையைப் பார்த்த வண்ணம் புதிதாக நந்தி சிலை நிறுவப் படுகிறது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக பணிகள் அனைத்தும் முடிப்பதற்காக வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

இந்த நிலையில், தூய்மை அருணை அமைப்பின் அமைப்பாளரான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அய்யங்குளம் சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, குளத்தில் படிகளை முழுமையாக சீரமைக்க வேண்டும். நான்கு திசைகளிலும் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பாக நீராடி செல்லும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.

தடுப்பு சுவர்களில் திருப்பாவை மற்றும் திருக்குறள் எழுத வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.

ஆய்வின்போது கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரை வெங்கட், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி மற்றும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்