பாழடைந்த கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்
முதுமலைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாழடைந்த கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்
முதுமலைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாழடைந்த கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வர்ணம் பூசும் பணி
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு காலை 9 மணிக்கு வருகிறார். பின்னர் வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து, பாகன்களிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, பழங்கள் வழங்குகிறார். அதன்பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டி கவுரவிக்கிறார்.
முன்னதாக முதுமலை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வனத்துறை அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி முதுமலையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்த கட்டிடங்கள், அறிவிப்பு பலகைகளில் வனவிலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவாக்கப்பட்டு வருகிறது.
பளிங்கு கற்கள்
இதேபோல் ஆதிவாசி கிராமங்களிலும் வீடுகள் உள்பட கட்டிடங்களில் வர்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்பட்டு வருகிறது. தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா, தெப்பக்காடு பகுதிகளில் பாலங்கள் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் அழகாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள மாயாற்றின் கரையோரம் பளிங்கு கற்கள் பதிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக பிரதமர் வரும் பகுதியில் பயனற்ற கட்டிடங்கள் சில இடங்களில் இருப்பதால் வர்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்படுகிறது. இதேபோல் முக்கிய இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றனர்.