கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது. எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மாவட்டத்தில் பல துறைகள் சிறப்பாக செயல்படுகிறது. சிலை துறைகளின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். சாதி சான்றிதழ் வழங்குவதில் சற்று பின்தங்கி உள்ளது. இதனை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விரைந்து வழங்க வேண்டும்.
விரைந்து செயல்படுத்த வேண்டும்
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் கருவிகள் தேவையான அளவு உள்ளதா எனவும், தேவை இருப்பின் தெரிவித்தால் விரைந்து வழங்கப்படும்.
ஏலகிரிமலையில் கட்டப்படும் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளையும், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் டாக்டர் டேரேஸ் அகமது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிள் கலந்து கொண்டனர்.
தொய்வு உள்ளது
அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் நடைபெறக்கூடிய பல்வேறு அரசுபணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்படுகிறது. சில துறைகளில் தொய்வு உள்ளது. அதற்கான காரணம் கேட்கப்பட்டு விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள குறைகள் கேட்கப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்.
மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. வாணியம்பாடி தொகுதியில் சிறுவிளையாட்டு அரங்கம் ரூ.3 கோடியில் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி செய்திக்கு எடுத்த நடவடிக்கை என்ன?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தினத்தந்தியில், திருப்பத்தூர், பாச்சல் பகுதியில் போலீசார் ஒத்துழைப்புடன் இரவு, பகலாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன் 17-ந் தேதி குறைதீர்வு கூட்டத்தில் சாராயம் விற்பதாக மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது உடனடி நடவடிக்கையாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாராய விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளன். சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன என பதில் அளித்தார்.