கொத்தமல்லி செடிகளை உலர வைக்கும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கொத்தமல்லி செடிகளை உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-14 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கொத்தமல்லி செடிகளை உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழை பொழிவு குறைவு

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல் மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பொழிவு என்பது குறைவுதான். அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் மட்டுமே தான் மழை பெய்யும். மற்ற மாதங்களில் மழை அதிக அளவில் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே கூறப்படுகின்றது.

அது போல் நெல் விவசாயத்தை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய், பருத்தி, கொத்தமல்லி உள்ளிட்ட விவசாயமே அதிகமாக நடைபெற்று வருகின்றது.

கொத்தமல்லி அறுவடை

இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு தற்போது கொத்தமல்லி சீசன் நடைபெற்று வருகின்றது. கடந்த புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் விவசாய நிலங்களில் விதைக்கப்பட்ட கொத்தமல்லி செடியானது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

தற்போது முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், பூசேரி, கருகுடி, மல்லல் உள்ளிட்ட பல கிராமங்களில் கொத்தமல்லி பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கொத்தமல்லிகளை செடியில் இருந்து கொத்தமல்லியை தனியாக பிரித்தெடுப்பதற்காக முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலை பகுதிகளில் பல இடங்களிலும் கொத்தமல்லி செடிகள் குவியல் குவியலாக போட்டு வைக்கப்பட்டுள்ளன.

சாலையில் போடப்பட்டுள்ள கொத்தமல்லி செடிகள் மீது வாகனங்கள் செல்லும்போது செடிகளில் இருந்து கொத்தமல்லி தனியாக பிரிகின்றன. அந்த கொத்தமல்லியை அள்ளி ஒன்று சேர்த்து தொடர்ந்து நன்கு உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மட்டியாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவி கூறியதாவது:-

சாைலயில் உலர வைக்கும் பணி

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் இருந்து கொத்தமல்லி பயிரிடும் சீசன் தொடங்கும். அது போல் கடந்த புரட்டாசி மாதத்திலிருந்து கொத்தமல்லி விதைகளை தூவி விவசாயத்தை தொடங்கினோம் புரட்டாசி மாதத்தில் விதைத்தூவி தொடங்கியதால் பருவமழை சீசனில் பெய்த ஓரளவு மழையால் கொத்தமல்லி செடிகள் நன்றாக முளைக்க தொடங்கின. தற்போது கொத்தமல்லி செடிகளை அறுவடை செய்து செடியில் இருந்து பிரித்து தனியாக எடுப்பதற்காக சாலையில் உலர வைத்துள்ளோம்.

மட்டியாரேந்தல்,கடம்போடை, பூசேரி உள்ளிட்ட பல கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொத்தமல்லியை தனியாகவும் ஊடுபயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொத்தமல்லி செடிகள் கருக தொடங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்