விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்
வந்தவாசியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வந்தவாசி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வந்தவாசியில் சன்னதி தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் முடங்கிப் போயிருந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்களின் தொழில் தற்போது மீண்டும் துளிர் விட தொடங்கி உள்ளது.
மச்ச விநாயகர், தேசியக்கொடியுடன் கூடிய விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குழந்தை விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், கஜபுஜ விநாயகர் போன்ற பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்து, வண்ணங்கள் பூசுவதில் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வந்தவாசி தாலுகாவில் முக்கிய பகுதிகளான தெள்ளார், கீழ்கொடுங்காலூர், மருதாடு, கீழ்கொவளைவேடு, மழையூர், தென்னாங்கூர் மற்றும் வந்தவாசி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல் போளூர் நகரில் சுமார் 40 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடவும், சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 160 விநாயகர் சிலை அமைத்து வழிபடவும் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.