'மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது'- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை. பா.ஜனதா தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பதாக கூறுகின்றனர். தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்து பார்ப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆகவே ஓ.பன்னீர்செல்வம் சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதல்-அமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்த நாளில் கொடுக்க போகிறோம் என சொல்லி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்களுக்கும் கொடுக்க வேண்டும். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.