கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ரேஷன், ஆதார் கார்டுகளை வீசுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-11 19:15 GMT

கோவை


குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ரேஷன், ஆதார் கார்டுகளை வீசுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


அடிப்படை வசதி இல்லாத அரசு பள்ளி


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


கூட்டத்தில் க.க.சாவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-


எட்டிமடை பேரூராட்சி க.க.சாவடியில் 1964-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு அங்கன்வாடி மையம், சத்துணவு கூடம் உள்ளது.

ஆனால் இங்கு மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. பள்ளி கட்டிடமும் சிதிலமடைந்து உள்ளது. இருக்கை வசதி இல்லை.

நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில் நுட்ப கணினி மையம், ஆங்கிலவழிக்கல்விக்கான வகுப்பறைகள், போதிய கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் மேற்கொள்ளப் பட வில்லை.

இந்த பள்ளி 10-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி போதிய வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


குடிநீர் வசதி கேட்டு முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மதுக்கரை நகராட்சி அறி வொளி நகர், சமத்துவபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேட் டால் குழந்தைகள் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


முன்னதாக எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணாவிட்டால் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் வீசி விட்டு செல்ல உள்ளதாக பெண்கள் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


எம்.ஆர்.ஐ. ஸ்கேன்


கோவை கணபதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 45) கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரித்தனர்.


அதற்கு அவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சினை இருப்பதால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். என்னி டம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் கூறினர். ஆனால் முன்பதிவு செய்தால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க சில நாட்கள் ஆகும் என்று அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிவித்தார். உடனே போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.


குண்டுவெடிப்பு கைதிகள்


ராஷ்ட்ரிய இந்து மகா சாபாவினர் அளித்த மனுவில், கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதி விவசாயிகள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியே வருவதால் தென்னை மரங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


மேலும் செய்திகள்