கள்ளக்காதலனிடம் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு
கள்ளக்காதலனிடம் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்தார்.
மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (35). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் தனலட்சுமிக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி கள்ளக்காதலுடன் மாயமானார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி கள்ளக்காதலுடன் தங்கி இருந்த இடம் தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று தனலட்சுமியை அழைத்து வந்தனர்.நேற்று காலை அளுந்தூரில் தனது கணவர் வீட்டில் இருந்த தனலட்சுமி, எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை நான் இங்கிருந்து எங்காவது செல்ல இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு தனலட்சுமியின் தாய், அவரது மாமியார், கணவர் சுரேஷ் ஆகியோர் தனலட்சுமிக்கு அறிவுரை கூறி உள்ளனர். அறிவுரையை கேட்காததால் தனலட்சுமியை அவரது தாயார் அடித்ததாக கூறப்படுகிறது. அதனால் தனலட்சுமி தனது தாயின் கையைப் பிடித்து கடித்து காயப்படுத்தினாராம். இதைதொடர்ந்து சுரேஷ் தனது மாமியாரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுரேஷின் தாய் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதியினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தனலட்சுமி வீட்டின் உள்ளே அவரது சேலையில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மணிகண்டம் போலீசார் இதுகுறித்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து சுரேசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.