கள்ளக்காதலனை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய பெண்
திருச்சுழி அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு விபத்து நடந்தது போல உடலை சாலையில் வீசி விட்டு சென்றனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு விபத்து நடந்தது போல உடலை சாலையில் வீசி விட்டு சென்றனர்.
மர்ம சாவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 45). இவருக்கு கடந்த ஆண்டு மின்வாரியத்துறையில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் இவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில் முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் முத்துராமலிங்கத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்காதல்
முத்துராமலிங்கத்தை யாரேனும் கொலை செய்து இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதாவிடம்(43) விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி சுனிதா என்பதும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது குழந்தை அன்னபூரணியுடன் இங்கு வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்து புளியங்குளம் அருகே உள்ள அணிகலக்கியேந்தல் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மின்வாரியத்தில் வேலை கிடைப்பதற்கு முன்பு முத்துராமலிங்கம் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். அப்போது அங்கு பணியாற்றி வந்த பள்ளிமடத்தை சேர்ந்த மலையரசன்(25) என்பவருடன் சுனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை முத்துராமலிங்கம் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
3 பேர் கைது
இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, மலையரசனிடம் தனது கணவரை கொலை செய்து விடுவோம். பின்னர் அவரது உடலை சாலையில் வீசி விட்டு விபத்து நடந்தது போன்று நாடகமாடி விடுவோம் என கூறியுள்ளார். இதன்படி மலையரசன், அவரது நண்பர் எம்.புளியங்குளத்தை சேர்ந்த சிவா(23) என்பவருடன் சேர்ந்து, முத்துராமலிங்கத்தை கட்டையால் அடித்து கொலை செய்தனர். பின்னர் முத்துராமலிங்கத்தின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் போட்டு விபத்தில் இறந்ததை போன்று நாடகமாடி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையில் இந்த விவரம் தெரியவந்ததால் சுனிதா, மலையரசன், சிவா ஆகிய 3 பேரையும் திருச்சுழி போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.