கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்

கணவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றார். அதேபோல் விஷ பாட்டில், பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-20 19:00 GMT

தீக்குளிக்க முயன்ற பெண்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுக்க தொடங்கினர். இந்த நிலையில் 10 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பெண் மனு கொடுக்க வந்தார். அவருடைய கையில் ஒரு பை இருந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் அந்த பெண் தான் வைத்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் நிலக்கோட்டை தாலுகா தோப்புப்பட்டியை சேர்ந்த காளியம்மாள் (வயது 34) என்பதும், அவருடைய கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையுடன் காளியம்மாளை தவிக்கவிட்டு வேறு பெண்ணுடன் திருப்பூருக்கு சென்று குடும்ப நடத்துவதாக தெரிவித்தார். மேலும் கணவரிடம் இருந்து தனக்கும், மகனுக்கும் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

கடை பிரச்சினை

இதையடுத்து பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த ஒரு பெண்ணின் பையில் பெட்ரோல் கேன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர், திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டை சேர்ந்த சங்கர் மனைவி சகாயமேரி (34) என்பதும், திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு அருகே சங்கரின் தாய்க்கு சொந்தமான கடை உள்ளது. அந்த கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கடையை அபகரிக்க முயன்றனர். அதை நாங்கள் தட்டிக்கேட்டோம்.

இந்த நிலையில் நள்ளிரவில் கடையின் பூட்டை சிலர் உடைத்து, தடுக்க சென்ற எங்களை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பதற்காக வந்தோம் என போலீசாரிடம் தெரிவித்தார்.

விஷ பாட்டிலுடன்...

இதேபோல் தாண்டிக்குடியை சேர்ந்த கோவில் பூசாரி சுந்தரமூர்த்தி என்பவர் விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். இதைப்பார்த்த போலீசார் விஷ பாட்டிலை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் கடன் பெற்றதாகவும், அதற்கான வட்டித்தொகையை பல ஆண்டுகளாக கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக வட்டியை கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என கேட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது என்னை விஷம் குடித்து தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்