காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
இரணியல் அருகே காதலை கைவிட்டதால் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய தொழிலாளியை கைது செய்தனர்.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே காதலை கைவிட்டதால் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய தொழிலாளியை கைது செய்தனர்.
தொழிலாளியுடன் காதல்
குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஞானபிரகாசம். இவருடைய மகன் பிரவின் ரஞ்சித் (வயது 27). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவருக்கும், காரங்காடு அருகே ஆலன்விளை பகுதியை சேர்ந்த 27 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண் திங்கள்சந்தையில் உள்ள ஒரு கம்பெனியில் டிசைனராக பணியாற்றி வருகிறார். சாதாரணமாக இருந்த பழக்கம் நாளடைவில் பிரவின் ரஞ்சித்துக்கும், அந்த பெண்ணுக்கும் காதலாக மலர்ந்தது. இருவரும் 2 வருடமாக காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.
கசக்க தொடங்கியது
இதற்கிடையே பிரவின் ரஞ்சித்துக்கு மது பழக்கம் இருப்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. இதனை அவர் கண்டித்துள்ளார். மேலும் அவர் மீதான காதல் கொஞ்சம், கொஞ்சமாக அந்த பெண்ணுக்கு கசக்க தொடங்கியது.
ஒரு கட்டத்தில் தன்னை ஒதுக்குவதை உணர்ந்த பிரவின் ரஞ்சித் மதுபோதையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபோக காதலியின் குடும்பத்தினரிடமும் தகராறு செய்ததால் காதலன் மீதான வெறுப்பு மேலும் அதிகமானது. அவரிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டார். இது பிரவின் ரஞ்சித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கத்திக்குத்து
இந்தநிலையில் வேலைக்கு சென்ற காதலி குருந்தன்கோடு குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பிரவின் ரஞ்சித் திடீரென காதலியின் முதுகில் தாக்கியுள்ளார். உடனே அவர் திட்டியுள்ளார். பதிலுக்கு அவர் அவதூறாக காதலியை பேசியதோடு திடீரென கத்தியால் அவருடைய வயிற்றில் குத்தி விட்டு தப்பி விட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் பிரவின் ரஞ்சித் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவரை கைது செய்தனர்.
காதலை கைவிட்டதால் பெண் என்ஜினீயரை, தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.