அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
வேலூர் அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது.
வேலூரை அடுத்த அன்பூண்டியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அணுகுச்சாலையோரம் முட்புதரில் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அங்குச் சென்று ெபண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்தப் பெண் வேலூர் கொணவட்டம் கீழாண்டை தெருவை சேர்ந்த சுகுமாறன் மகள் சுமித்ரா (வயது 28) என்பதும், திருமணமாகாத அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று அவ்வப்போது நடந்து கொள்வார். கடந்த 12-ந் தேதி சுமித்ரா டிபன்பாக்சில் உணவு எடுத்துக்கொண்டு தோழிகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தற்போது முட்புதரில் சுமித்ரா அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.