காட்டு யானை கோக்கால் மலைக்கு இடம் பெயர்ந்தது
கூடலூரில் ஆதிவாசி முதியவரை கொன்ற காட்டு யானை கோக்கால் மலையடிவாரத்துக்கு இடம்பெயர்ந்தது.
கூடலூர்
கூடலூரில் ஆதிவாசி முதியவரை கொன்ற காட்டு யானை கோக்கால் மலையடிவாரத்துக்கு இடம்பெயர்ந்தது.
ஆதிவாசி முதியவரை கொன்றது
கூடலூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று பல மாதங்களாக முகாமிட்டு தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று வருகிறது. இதனால் இரவு மற்றும் காலை நேரத்தில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அள்ளூர்வயல் கோட மூலா பகுதியை சேர்ந்த கருமன் (வயது 75).
இவர் தனது வீட்டில் இருந்து கூடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை கருமனை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பலியானவரின் வாரிசுக்கு வனத்துறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.
காட்டு யானை இடம்பெயர்ந்தது
இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அள்ளூர்வயல் அருகே உள்ள மார்க்கமூல பகுதியில் காட்டு யானை முகாமிட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானைகளுடன் அப்பகுதிக்கு சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மாக்க மூலாவில் இருந்து தனியார் எஸ்டேட் வழியாக கோக்கால் மலைக்கு காட்டு யானை இடம்பெயர்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து கூடலூர், ஓவேலி வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.