வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-08 19:55 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக நெல் மற்றும் கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகமாக பயிர் செய்கிறார்கள். களக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால் இங்குள்ள விவசாயிகள் வனவிலங்குகளின் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மலையில் இருந்து அடிவாரப்பகுதியை நோக்கி வரும் காட்டுப்பன்றிகள் புதர்களுக்குள் மறைந்து வாழ்ந்து தற்போது பெருகியுள்ளன. இவை இரவு நேரங்களில் விவசாயிகளின் வாழை மற்றும் கிழங்கு பயிர் செய்துள்ள தோட்டங்களுக்குள் பெருங்கூட்டங்களாக புகுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

வாழைப்பயிர்களின் அடிப்பகுதியைக் கடித்துக்குதறி அதன் கிழங்கை சாப்பிடுகின்றன. காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் தொகுதி எம்.எல்.ஏ.வான என்னை சந்தித்த களக்காடு பகுதி விவசாயிகள் காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைவது குறித்து மனு கொடுத்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தி விவசாயிகளை காக்க கேரள அரசு காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. அதேபோல் தமிழகத்திலும் காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்