2வதாக திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார்

முதல் திருமணத்தை மறைத்து ௨ வதாக தன்னை திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார் செய்தார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-05-29 14:41 GMT

கோவை

முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக தன்னை திருமணம் செய்ததாக வியாபாரி மீது மனைவி புகார் செய்தார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வியாபாரி மீது புகார்

கோவையை சேர்ந்த நர்மதா (வயது 26) கோவை மாநகர் மேற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் கோவைப்புதூர் லட்சுமி நகரை சேர்ந்த விவேக் (வயது 35) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. நாங்கள் கோவைப்புதூரில் வசித்து வந்தோம். விவேக் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்தார்.

இதற்காக அவர் என்னிடம் 2 தவணையாக ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வாங்கினார். மேலும் எனது 17 பவுன் நகையை எனக்கு தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்தார். நான் அந்த நகையை தேடியபோது, அதை வியாபாரத்துக்காக அடகு வைத்ததாக கூறி அதற்கான ரசீதை என்னிடம் கொடுத்தார்.

2-வதாக திருமணம்

மேலும் அவர் அடிக்கடி ஒரு பெண்ணிடன் செல்போனில் பேசி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த நான் அது குறித்து கேட்ட போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அவரின் செல்போனை எடுத்து எந்தெந்த எண்ணுக்கு பேசி உள்ளார் என்று பார்த்தேன். இதில் அவர், அடிக்கடி பேசிய செல்போன் எண்ணை கண்டுபிடித்தேன்.

அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர் முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், தன்னை விவேக்கின் மனைவி என்றும், தங்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதும், அந்த பெண்ணுக்கு தெரிந்துதான் 2-வதாக என்னை விவேக் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

எனவே ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு அதை மறைத்து என்னை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த விவேக், இதற்கு காரணமாக இருந்த விவேக்கின் தாய் லட்சுமி, அவருடைய சித்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து போலீசார் விவேக், லட்சுமி உள்பட 3 பேர் மீது ஏமாற்றுதல், கூட்டு மோசடி உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----

Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

மேலும் செய்திகள்