திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீர் நிறுத்தம்

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மணமகன் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

Update: 2022-11-21 21:56 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மணமகன் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருமணம்

திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்கவிளை பகுதியை சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பெற்றோைர இழந்த மணப்பெண் 10 வயது முதல் கான்வென்ட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். அவர் அங்குள்ள பாதிரியார்களின் பராமரிப்பில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு தேமானூர் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான தடபுடலான ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் செய்திருந்தனர்.

திருமணம் முடிந்ததும் செவரக்கோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் விருந்து கொடுக்க உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.

கடைசி நேரத்தில் நிறுத்தம்

திருமண நேரம் நெருங்கியதை தொடர்ந்து மதியம் மணமகன் வீட்டில் இருந்து பேண்டு, வாத்தியம் முழங்க திருமணம் நடைபெறும் ஆலயத்துக்கு புறப்பட உறவினர்கள் தயாராகினர்.

அந்த சமயத்தில் மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம். திருமணத்தை நிறுத்துகிறோம் என கூறி மணப்பெண்ணை கவனித்து வருபவர்களின் தரப்பில் இருந்து செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மணப்பெண்ணை கவனித்து வரும் நபர்களை அவர்கள் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் சரியான பதில் சொல்லவில்லை.

மணமகன் பரபரப்பு புகார்

இதனால் மணமகன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், "எனக்கும், மணமகளுக்கும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. தற்போது கடைசி நேரத்தில் திருமணத்தை திடீரென நிறுத்தி விட்டனர். நோய் உள்ளவனுக்கு பெண் தர முடியாது. திருமணத்தை நிறுத்துகிறோம் என கூறி விட்டனர். நான் ஏற்கனவே இந்த நோய் பற்றி அவர்களிடம் கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தி மனதளவில் வேதனைப்படுத்தியுள்ளனர். எனவே மணப்பெண்ணை நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தி எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதேபோல் மணப்பெண்ணின் சித்தி, மணமகனுக்கு ஆதரவாக திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதில், "ஏற்கனவே எனது அக்காள் மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை அவளை பராமரித்து வருபவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலை பற்றி அறிய முயன்ற போது அவளை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள்" என கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

பின்னர் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதிலும் முன்னேற்றம் எதுவும் இல்லை.

எனவே கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துகள் வீணானது. இந்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்