மேட்டூர் அணையின் வலதுகரை பகுதியில் பச்சை நிறமாக மாறிய தண்ணீரால் பரபரப்பு

மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-20 20:55 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணை

கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து இன்றி காணப்பட்டது.

அப்போது தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளித்தது. அதாவது, தண்ணீர் மீது பாசி படர்ந்தது போன்று இருந்தது. தண்ணீரும் துர்நாற்றம் வீசியது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் தண்ணீரின் மீது ஒரு வகையான திரவத்தை தெளிப்பான் மூலம் தெளித்தனர். அதன்பிறகு துர்நாற்றம் வீசுவது குறைந்தது.

மீண்டும் பச்சை நிறம்

இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அதே பிரச்சினை உருவாகி உள்ளது. அணையின் வலது கரை பாதையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் மீது பாசி படர்ந்தது போன்று பச்றை நிறத்தில் காணப்படுகிறது.

ஏற்கனவே மேட்டூர் காவிரி ஆற்றில் அங்குள்ள முனியப்பன் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. அவை எதற்காக செத்து மிதந்தன என்பது தெரியாத நிலையில், தற்போது அணையின் வலது கரை பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி இருப்பது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகளுக்கு கோரிக்கை

தண்ணீர் பச்சை நிறமாக மாற என்ன காரணம் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணத்தையும் விளக்க அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்