பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், அணை நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

பொள்ளாச்சி, 

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், அணை நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது.

மதகு உடைந்தது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பரம்பிக்குளம் அணை உள்ளது. பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணையாக பரம்பிக்குளம் அணை விளங்குகிறது. இந்த அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் தீவிரமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் அணை நிரம்பி முழுகொள்ளளவில் இருந்தது.

மேலும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு பரம்பிக்குளம் அணையில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்த போது சங்கிலி அறுந்து, மேலே இருந்த சுவர் விழுந்ததில் மதகு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில்பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

60 அடியாக குறைந்தது

நீர்வெளியேறுவது முழுமையாக நின்ற பிறகு தான் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் அதிகாரிகள் அணையில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது மதகு வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் 3-வது நாளாக கேரளாவுக்கு வீணாக செல்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்து உள்ளது. மதகை சீரமைக்க தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்